January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய கைதிகள் பொதுப் பேருந்தில் பயணம்: பயணிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையில் பொலன்னறுவை – கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிறைக் கைதிகள் 5 பேர் தப்பிச் சென்ற பொதுப் பேருந்தில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு தப்பியோடியவர்கள் NB- 9268 என்ற இலக்கத்தையுடைய பொதுப் பேருந்தில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் பொலன்றுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கைதிகளே இன்று காலை தப்பியோடியுள்ளனர்.

22, 23, 26, 32 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கொவிட்- 19 தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

தப்பிச் சென்றவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக 0718591233 அல்லது 119 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.