January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ். மாநகர சபை விவகாரம்’; தமிழரசுக் கட்சிக்குள் வெடித்தது மோதல்

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. யாழ். மாநகர சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

“மேயர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் விருப்பத்துக்கு அமைவாக – மிகவும் பக்குவமாக – பொறுப்பாகச் செயற்படுமாறு கட்சியின் தலைவரின் (மாவை சேனாதிராஜா) கவனத்துக்குக்கொண்டு வந்திருந்தேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.

புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

யாழ். மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல” என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் கடிதம் தொடர்பில் மாவை விசனம் 

யாழ். மாநகர சபையின் மேயர் பதவியை ஒரு வாக்கால் இழந்தார் இ. ஆனோல்ட்

இதனிடையே, “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகின்றார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் நாளை உரிய முறையில் பதில் வழங்குவேன்” என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம்” என்று தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் மாவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, “எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளது என எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன்.

கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகின்றேன். ஆனால், சுமந்திரன் கட்சித் தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாகப் பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது.

நாமும் பேசுவதெனில் பலதைப் பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் நாளை காலை கட்சிக்குள் இது பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் உரிய முறையில் பதிலளிப்பேன்” என்று சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“கட்சி உறுப்பினர்கள் ஆனோல்டையே விரும்பினார்கள்”: மாவை விளக்கம்

யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே தெரிவுசெய்ய சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விரும்பினார்கள் என்பதை கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்தே அறிந்துகொள்ள முடியும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே ஆனோல்ட்டை மேயர் தெரிவுக்குப் பரிந்துரைத்தேன். நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத – சட்டவிரோத செயற்பாட்டில் நான் ஈடுபடவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார் மாவை சேனாதிராஜா.

யாழ். மாநகர சபை புதிய மேயர் வி. மணிவண்ணன்

யாழ். மாநகர சபை தோல்வி தொடர்பில் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாவை, “யாழ். மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வது அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே. உறுப்பினர்கள் ஆனோல்ட்டை விரும்பும்போது அதற்கு மாறாக வேறொருவரின் பெயரை நான் பிரேரிக்க முடியாது.

மேயர் தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் பக்குவமாக நடக்குமாறு அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரும்பினார்கள்.

அவர்களின் விருப்பம் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேயர் தெரிவு தொடர்பில் இரண்டு தடவைகள் நடைபெற்ற கூட்டங்களில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் எவரும் சொலமன் சிறிலை விரும்பவில்லை. அவரின் பெயரை உறுப்பினர்கள் எவரும் என்னிடம் பிரேரிக்கவில்லை.

கூட்டமைப்பின் மேயர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எமது தரப்பினரும் அந்த இரு கட்சிகளிடம் நேரில் பேசினார்கள். ஆனால், அந்தக் கட்சியினர் எவரும் நம்பத் தகுந்த வகையில் – உருப்படியான பதில் எதையும் வழங்கவில்லை.

நான் வேறு வேட்பாளரை மேயராகக் களமிறக்கியிருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியிருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் மணிவண்ணன் நேற்று மேயராகக் களமிறங்கியபோது அந்தக் கட்சியைச் சேர்ந்த 10 பேர் கட்சியின் தலைமையின் உத்தரவை மீறி அவருக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.

இந்தநிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை நாம் எப்படி நம்பலாம்? அதேவேளை, ஈ.பி.டி.பியினர் மீதும் எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

“அருள்குமரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை”

இதேவேளை, புதிய மேயர் தெரிவில் தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக நடுநிலை வகித்த மகாலிங்கம் அருள்குமரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

“யாழ்.மாநகர சபையில் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 பேர் எமது கட்சியின் மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். மகாலிங்கம் அருள்குமரன் என்ற உறுப்பினர் மட்டும் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்காமல் நடுநிலை வகித்திருந்தார்.

ஆனோல்ட் தோற்றமைக்கு இவரும் ஒரு காரணமாகும். எனவே, இவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாளை நடைபெறும் எமது கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதும் பேசப்படும். அதன்பின்னர் அருள்குமரனுக்கு எதிரான நடவடிக்கையை நாம் எடுப்போம்” என்றார் மாவை சேனாதிராஜா.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் போட்டியாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டைத் (20 வாக்குகள்) தோற்கடித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (21 வாக்குகள்) ஒரு மேலதிக வாக்கால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.