உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக, அரசாங்க உறுப்பினர்களை கொண்ட விசேட குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மற்றைய அங்கத்தவர்களாக அமைச்சர்களான உதய கம்மன்பில , அலி சப்ரி , நிமல் சிறிபால டி சில்வா , விமல் வீரவன்ச ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த , வியாழேந்திரன் ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா , பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 20 ஆவது திருத்தம் தொடர்பான வரைபை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கவுள்ளனர்.20 ஆவது திருத்த வரைவில் காணப்படும் சில விடயங்களை திருத்த வேண்டுமென்று அரசாங்கத்திற்குள் சிலர் யோசனைகளை முன்வைத்து வரும் நிலையிலேயே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.