இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளுக்குமிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் இன்று கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல் 30ஆம் திகதி காணொளி மூலம் இடம்பெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாக இது அமைந்ததால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகுகள் மூலமான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் ககாரணமாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டதாகக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ரத்னாயக்கா தலைமையிலும், இந்திய தரப்பில் ரஜீவ் ரஞ்சன் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இரண்டு தரப்பிலும் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், சுமூகமான முறையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதேவேளை, வெகு விரைவில் இது தொடர்பில் அமைசர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அதில் கொள்கை ரீதியான சில் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட முயற்சியாக இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.