யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைமைப் பதவியை இலங்கைத் தமிழரசுக் கட்சி இழந்தமைக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவே காரணம் என்று அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ். மாநகர சபை மேயர் தேர்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவரின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை மேயர் பதவியை, இழக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு- செலவுத் திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்று, சட்ட ஏற்பாடுகளுக்கமைய இராஜினாமாச் செய்த ஆர்னோல்ட்டை மீண்டும் அந்தப் பதவிக்குப் போட்டியிட வைத்ததே, தோல்விக்கான காரணமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராக நிறுத்தும் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக, தன்னிச்சையாக ஆர்னோல்ட் நிறுத்தப்பட்டதை ஜனநாயக விரோதச் செயல் என்று சுமந்திரன் கண்டித்துள்ளார்.