இலங்கையில் கொரோனா மரணங்களைக் கையாள்வதில் அரசாங்கம் ஒரு இனத்தைச் சார்ந்து முடிவெடுக்காமல், இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா மரணங்களைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் இவ்விடயம் அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பு நிலைக் கருத்துகளை முன்வைத்திருந்தாலும், இந்த விடயத்தில் தமிழ் இனம் சார்ந்து நேரடியாக தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை என்பது மனவேதனை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் நீதி, நியாயம் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதோடு, அது ஒரு சாராருக்கு சார்பானதாக இருக்கக்கூடாது என்பதையும் இன்பராசா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா விடயத்தில் ஒரு இனம் சார்ந்து முடிவெடுக்கப்படும் போது பௌத்த, கிறிஸ்தவ, இந்து என மும்முனைகளிலும் அரசாங்கம் பல்வேறு பிரச்சிகைளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.