July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் யுக்ரைன் பயணிகளுக்கு கொரோனா: ‘பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை’

இலங்கைக்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ள யுக்ரைன் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே, சுகாதார அமைச்சு இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் எந்தவொரு கட்டத்திலும் பொது மக்களுடன் கலக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, ஒன்பது மாதங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழுவாக யுக்ரைன் பயணிகள் கருதப்படுகின்றனர்.

கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டாலும், தாம் இவ்வாறான சம்பவங்களை எதிர்பார்த்து, அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்திருந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான யுக்ரைன் பயணிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையவர்களின் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பாக பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சுற்றுலாப் பயணிகள் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களுடன் தொடர்புபடாமல் பயணத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.