வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தவர் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் கட்டாரில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் பெரியகாடு இராணுவ முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (11) இரவு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் இந்த நபர் நேற்று மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் அந்த நபரை மீண்டும் அதே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத போதும், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடையே தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.