
இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ‘நெறிமுறை’ அனுமதியை ரஜரட்ட பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நெறிமுறைக் குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பாணியை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் 2 முதல் 3 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நோய்த் தடுப்புப் பாணிக்கு ஆயர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவின் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், கொரோனா தடுப்புக்கான மருந்து என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை.
மூலிகைப் பாணி மனித உடம்பினுள் உள்ள கொவிட்- 19 வைரஸை அழிக்கக்கூடியது என்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடியது என்றும் நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணியைப் பெற்றுக்கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்ததையடுத்து, பாணி விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தம்மிக்க பண்டாரவின் பாணியை அருந்திய கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.