
இலங்கையில் மாகாண சபைகள் முறைமை குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்று பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாண சபைகள் முறைமை தொடர்பில் இலங்கை தனியாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்றும் மாகாண சபைகள் முறைமையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுடன் கலந்துரையாடாமல் தீர்மானத்துக்கு வருவது பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சாத்தியமானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.