இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் மூலம் 1,900 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட நாள் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த 8 நாட்களில் இடம்பெற்ற 527 வீதி விபத்துகளில் 39 பேர் உயிரிழந்துள்ளதோடு, 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் ஜனவரி 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் பொலிஸ் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்கள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டுமென சாரதிகள் மற்றும் பாதசாரிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் வீதி விபத்துக்களால் வருடாந்தம் 3,000 க்கு அதிகமானோர் உயிரிழக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.