இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தரக் கோரி வடக்கில் சில பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் எனவும், இந்த விடயத்தில் சர்வதேச நீதியைபெற்றுத்தர வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோரிக்கை விடுத்தனர்
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’, ‘தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா’ என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
மேலும், மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில்
வவுனியா மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? தமிழ் குழந்தைகள் என பயங்கரவாதிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில்
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் ஒரு தீர்வுமே எமக்கு கிடைக்கவில்லை. மேலும்,சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம் என்றார்.