November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய மேயரை தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளை பெற்றதுடன், முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் 20 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் மேயராக தெரிவாகியுள்ளார்.

மாநகர சபையின் மேயர் தெரிவுக்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது மேயர் வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இது தொடர்பான வாக்கெடுப்பை பகிரங்கமாக நடத்துவதா? அல்லது இரகசியமாக நடத்துவதா? என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது, சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றே கோரியிருந்தனர். இதன்படி முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும், மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவரும் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரும் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 பேர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர்.

இதன்படி யாழ் மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்தார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர மேயராக பதவி வகித்த இ.ஆனோல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.