January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனிப் பிராந்தியக் கோரிக்கை’ கூட்டமைப்பின் நப்பாசை: சரத் வீரசேகர

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் முன்வைத்துள்ள யோசனையை நிராகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து செயற்பட்டுவருவதாகவும் சரத் வீரசேகர உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் யோசனைகளில் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

“புதிய அரசியலமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு ஒரு பிராந்தியமாக இருத்தல் வேண்டும்” என்று புதிய அரசியலமைப்பு நிபுணர்கள் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபை முறைமை மூலம் தனி இராச்சியத்தை நடத்தலாம் என்ற எண்ணத்துடனேயே கூட்டமைப்பினர் உள்ளனர். அதிலும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமி என்ற மமதையுடனும், அந்த இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற நப்பாசையுடனும் அவர்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மாகாண சபை நிர்வாக முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மாகாண சபைகளுக்கான அமைச்சர் சரத் வீரசேகர தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.