யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதன்கிழமை காலை நடைபெறவுள்ள மேயர் தெரிவுக்கான போட்டியில் இ. ஆனோல்டுக்கு எதிராக வி.மணிவண்ணன் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், இவ்விரு போட்டியாளர்களில் யார் வெல்லப்போகின்றார்கள் என்பது தொடர்பில் குழப்பம் நீடிக்கின்றது.
யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடைந்ததால் மேயர் பதவியை ஆனோல்ட் இழந்திருந்தார்.
இந்த நிலையில், ஆனோல்டையே மீண்டும் மேயராக தெரிவுசெய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
ஈபிடிபியின் ஆதரவு?
கடந்த தடவை மேயர் தெரிவின்போது, ஈபிடிபியின் காய்நகர்த்தலினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது.
எனினும், “இம்முறை எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. ஒரு தரப்பும் எங்களுடன் பேச்சு நடத்தவும் இல்லை. இறுதி நேரத்திலேயே யாருக்கு ஆதரவு என்று முடிவெடுப்போம்” என்று ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணன், தான் முன்னணி சார்பில் மேயர் தெரிவில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் 13 உறுப்பினர்களில் 8 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.மாநகர சபையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைக்கப்போவதில்லை என்றும், தமது கட்சி மேயர் தெரிவுக்குப் போட்டியாளரை நிறுத்தாது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆனோல்ட்டை மீண்டும் மேயராகப் போட்டியிட வைத்தால் எதிர்த்து வாக்களிப்போம் எனவும் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவான சிலர் நாளை மணிவண்ணனை ஆதரிக்கக்கூடிய சூழல் காணப்படுவதாகவும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது ஆனோல்ட்டுக்கு பாதகமாக அமையும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சபை உறுப்பினர்கள் சிலரை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
யாழ்.மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 03 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.