November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய ஆண்டில் 2 இலட்சம் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க இலங்கை அரசு நடவடிக்கை

இலங்கையில் 2021 புதுவருடத்தில் கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இரண்டு இலட்சம் சுயதொழில் வாய்ப்புக்களும் கிராமப்புற உற்பத்திகளுக்காக 25 ஆயிரம் புதிய சந்தை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி முகாமையாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராமப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளர்களை வாழ்வாதார ரீதியில் வழிநடத்தும் செயற்பாட்டிற்கு சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான பயிற்சி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, கிராமப்புற பெண்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே 2021 வரவு செலவுத் திட்டத்தை கிராம மட்டத்தில் செயற்படுத்துவதில் முழு நாட்டையும் உள்ளடக்கிய மிக வலுவான துறையான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு விசேட பொறுப்பு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, சீதா அரம்பேபொல, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.