January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்வு: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo

இலங்கையில் இன்றைய தினத்தில் இது வரையான காலப்பகுதியில் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 42,056 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 704 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதன்படி இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,925 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

உயிழப்பு 195 ஆக உயர்வு

கொரோனா தொற்றால் இன்றைய தினத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 195 ஆக உயர்வடைந்துள்ளது.

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிம் எண்ணிக்கை 118 ஆக உயர்வடைந்துள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து மலையகம் சென்ற 85 பேருக்கு கொரோனா

வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல பகுதியில் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கில் இதுவரையில் 1058 பேருக்கு தொற்று

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

இந்த மாகாணத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 138 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 126 பேருக்கும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 26 பேருக்கும், கல்முனை சுகாதார பிரிவில 768 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் இதுவரையில் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 4 மரணங்களும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.