November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை’

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதே சுகாதார அமைச்சின் உறுதியான நிலைப்பாடாக இருப்பதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் பகிரப்படுவதாகவும், அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை எரிப்பதே சிறந்தது என கடந்த மார்ச் மாதம் விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் வழங்கிய ஆலோசனைக்கமையவே சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இது தொடர்பில் ஆராய்வதற்காக இரண்டாவது தடவை நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை வழங்கப்படும் வரை தாம் காத்திருப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், விசேட நிபுணர் குழுவின் அறிக்கை நேற்றைய தினம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், அதுதொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.