July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறுவோரை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள்

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறுவோரை கண்டறிய  நாளையும், நாளை மறுதினமும் நாடு பூராகவும் விசேட சுற்றி வளைப்புகளை நடத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வருட இறுதி நாட்களில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி ஒன்றுகூடல்கள் நடக்கலாம் என்பதாலேயே இந்த சுற்றிவளைப்புகளை நடத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் தப்பிச் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு தப்பிச் செல்ல உதவுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சபுகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனொருவர், சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்று, மாகொல பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் அவருடன் தொடர்புகளைப் பேணிய ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே தனிமைப்படுத்தப்படுவர்கள் தப்பிச் செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு எதிராகவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.