July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”திருக்கேதீச்சர ஆலயத்தின் காணி அபகரிப்பு முயற்சி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்” : சார்ள்ஸ் எம்.பி

இலங்கையின் மன்னார்  திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான காணியொன்று ‘மாதோட்ட’ விகாரையின் பௌத்த பிக்கு ஒருவரால் அபகரிக்க முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர் இன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அந்த  காணியானது திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் போது குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு ஆலய காணியையும் தனியார் காணி ஒன்றையும் இணைத்தவாறு இராணுவத்தினரால் ‘மாதோட்ட’ என்ற விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், யுத்தத்தின் பின்னர் விகாரை அமைக்கப்பட்டிருந்த பகுதியை தவிர ஏனைய பகுதி மீண்டும் திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குறித்த ‘மாதோட்ட’ விகாரையின் பௌத்த பிக்கு மிகுதி காணியையும் அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளதாக,  திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதன்படி இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் இந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது ஆலய பிரதம குரு, பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.