May 23, 2025 10:26:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9 மாதங்களின் பின்னர் இலங்கை வந்த முதலாவது சுற்றுலா குழுவுக்கு விசேட வரவேற்பு

Photo: Facebook/ Prasanna Ranathunga

9 மாதங்களின் பின்னர் முதலாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று உக்ரைனில் இருந்து இன்று இலங்கை வந்தது.

அதன்படி 186 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகளுடன் வந்த விசேட விமானம் இன்று பிற்பகல் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

பின்னர் இவர்கள், இலங்கையின் கொவிட் தடுப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் இவர்கள் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று நிலைமையை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் மூடபட்டதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, அதனை மீளக் கட்டியெழுப்பும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக உக்ரைன் சுற்றுலாக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.