இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் தந்தையும் மேற்கொண்ட வெள்ளைத் துணி கவனயீர்ப்பு நடைபவனிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை கால்நடையாக மேற்கொள்ளப்பட இருந்த அமைதி வழிப் போராட்டம், கல்முனை நீதிவானின் தடை உத்தரவைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி, கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துவிட்டு, இந்த நடைபவனி ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை பகுதியில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே, கல்முனை நீதிவானின் உத்தரவுக்கமைய பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், புத்தளம் நகரில் சர்வமத அமைப்புப் பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாஸா எரிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக இவர்கள் கையொப்பமிட்டுள்ளதோடு, வெள்ளைத் துணிகளையும் கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.