இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி மலைக்கு புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித சின்னங்கள், நல்லதண்ணி பாதை வழியாக சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பிக்கும் யாத்திரை காலம் எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும்.
இந்நிலையில் மலையகத்தில் தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை காணப்படுவதால் யாத்திரை வருபவர்களுக்கு கடுமையான சுகாதார ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக மலைக்கு பிரவேசிக்கும் அனைத்து பாதைகளும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் 24 மணிநேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்போர் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.