May 24, 2025 16:10:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் மேச்சல் இல்லாது இறக்கும் மாடுகள் : ஒரு வாரத்திற்குள் தீர்வு காண்பதாக அங்கஜன் உறுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் மேச்சல் இல்லாது மாடுகள் இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மேச்சல் தரவை இல்லாமையினால் கால்நடைகள் பல இறந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி கோணாவில் பகுதியில் மேச்சல் நிலம் இல்லாமையினால் மாடுகளை இழந்துவரும் பண்ணையாளரான தங்கவேலு சுரேந்திரன் உள்ளிட்ட பண்ணையாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதனிடம் நிலைமைகளை கேட்டறிந்தார்.

இதன்போது தமக்கு நிரந்தரமாக மேச்சல் தரை ஒன்றை அமைத்து தருமாறும், தொடர்ந்தும் வருடா வருடம் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாகவும்  பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வருடம் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் பண்ணையாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் அங்கஜன் இராமநாதன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தினார்.

இராஜாங்க அமைச்சரும் இவ்வாரத்திற்குள் தீர்வு பெற்று கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அங்கஜன் இராமநாதன் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு பண்ணையாளர்களுக்கு நீண்டகால திட்டமாக மேச்சல் தரை ஒன்றை அமைப்பது தொடர்பில் அதற்கான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றது.

உடனடியாக இந்த கால்நடைகளை காப்பாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் தேவை என்ற அடிப்படையில் அமைச்சருக்கு தெரிவித்து அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி இந்த வாரத்திற்குள்  தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார்.

சேலைன்களை கொடுப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் புற்களையாவது வேறு மாவட்டங்களிலிருந்து எடுத்து கொடுக்க கூடிய வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.