சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிர் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.