July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9 மாதங்களின் பின்னர் முதலாவது வெளிநாட்டு சுற்றுலாக் குழு இன்று இலங்கை வருகிறது

இலங்கையின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலாவதாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று இன்று நாட்டுக்கு வரவுள்ளது.

அதன்படி 214 சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் விமானம், இன்று பிற்பகல் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயண முகவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று நிலைமையை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் மூடபட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமையை கருத்திற்கொண்டு  சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பைலட் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கை சர்வதேச விமான நிலையம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முழுமையாக  திறக்கப்படும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும் முதலாவதாக ரஷ்ய நாட்டு சுற்றுலாக் குழுவே நாட்டுக்கு வர இருந்த போதும், அவர்களை அழைத்து வரும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.