
இலங்கையில் பல்வேறுப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவர் வெயங்கொடை – பாதுராங்கொட வீதியில் வசித்து வந்த 37 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயலொன்று தொடர்பாக இந்த நபர் பேலியகொடை – மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 19 ஆம் திகதி வெயாங்கொட மாளிகாதென்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பொலிஸார் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை சுற்றிவளைப்பொன்றிற்காக வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கம்பிடிய பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றிருந்த போது, அங்கு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இவர் காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.