-யோகி
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்’ தொடர்பிலான தனது முழுமையான மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கையின் அப்போதைய மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தின் இணை-அனுசரணையுடன் ‘நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் தீர்மானம் (30.1) நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அதே ‘நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்’ செயன்முறையை இலங்கை அரசாங்கத்தைப் பயன்படுத்தி முழுமையாக நடைமுறைச் சாத்தியமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 2017, 2019 ஆம் ஆண்டுகளின் மார்ச் மாத கூட்டத்தொடர்களில் முறையே 34.1, 40.1 ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இரண்டு தடவைகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இங்கு கால அவகாசம் என்ற சொற்பதம் சரியா – தவறா என்ற விவாதங்கள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் அவர் சார்ந்த தரப்பினரும் கால அவகாசம் என்பதை எதிர்க்கின்றார்கள். அந்தத் தரப்பினரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் கால அவகாசம் என்றே கூறுகின்றனர்.
உண்மையில் ‘ரோல் ஓவர்’ (ROLL OVER) என்ற ஆங்கில சொற்பதம் தான் தீர்மானங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழியில் நேரடியான ஒத்த பொருள் கிடையாது.
அதாவது 30.1 தீர்மானத்தினை மீளவும் அவ்வாறே நிறைவேற்றப்படுவதையும் அத்தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அவதானிப்பதற்காக இரண்டு வருடங்கள் ஒதுக்கப்படுவதே இந்த ‘ரோல் ஓவரின்’ நோக்கம் என இந்த விடயங்களில் அதிக ஊடாட்டம் கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த அவகாசம் அளிக்கும் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களிடத்தில் நேரடியாக அனுமதி கோரப்படாது விட்டாலும் அவர்கள் ஆணை வழங்கிய பிரதிநிதிகளிடத்தில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அவர்கள் அனுமதியும் அளித்திருந்தார்கள்.
அவர்கள் பிரேரணை கொண்டுவரும் தரப்புக்களால் அனுமதி கோரப்பட்டபோது பாதிக்கப்பட்ட சாதாரண மக்களிடத்தில் அனுமதியைப் பெறவில்லை. அவர்கள் ஆணையைப் பெற்றிருக்கின்றோம் என்று சிந்தித்தார்களே தவிர, தாம் எடுக்கும் தீர்மானத்தில் ஆணைவழங்கிய மக்களுக்கும் வகிபாகம் உண்டு என்பதை கணக்கில் எடுக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இந்த கால அவகாசத்துக்கு பின்னரான சூழலில் ஏற்பட்டுள்ள நான்கு முக்கிய விளைவுகள் இங்கு நோக்கத்தக்கது.
முதலாவது- தமிழ் மக்களின் ‘ஏகப் பிரதிநிதித்துவ ஆணையை பெற்றவர்கள்’ என்ற அந்தஸ்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனது.
அடுத்து- தமிழ்த் தேசியக் கொள்கையை தீவிரமாக முன்னிலைப் படுத்தும், கூட்டமைப்பின் மாற்றீடுகளாக தம்மை அடையாளப்படுத்த முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
மூன்றாவது- தேசிய ரீதியில் கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டுடன் பலப்படுத்த விளைந்த ரணில் தலைமையிலான அணி தேசிய அரசியலில் அடையாளத்தை இழந்து முகவரி அற்றுப்போனது.
நான்காவது- ஜெனிவா விடயத்தில் தமிழ் தரப்புக்கள், சர்வதேச தரப்புக்கள் உள்ளிட்டவற்றின் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாது, ஐநா தீர்மானத்திலிருந்து வெளியேறும் அறிவிப்பினைச் செய்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கிய சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது இலங்கையின் புதிய அரசாங்கம்.
சிங்கள பெருந்தேசிய வாதத்தினை உடையவிடாது பாதுகாப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் துணிந்து எடுப்பதற்கு இது வித்திட்டுள்ளது.
புதிய பிரேரணை
இந்தப்பின்னணியில், எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இருதடவைகள் நீட்டிக்கப்பட்டிருந்த 30.1 தீர்மானம் முடிவுக்கு வரவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினை தொடர்ந்தும் ஐ.நா.மனித உரிமைகள் தளத்தில் வைத்திருப்பதாக இருந்தால் ஒன்றில் நிறைவுக்கு வரும் 30.1 தீர்மானத்தினை மீண்டும் நீட்டித்து, மீண்டும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் நிராகரித்த தீர்மானத்தை நீட்டிப்பதால் பயன் ஏதுமில்லை.
ஆகவே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றே நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக இருந்தால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய கருத்தாடல்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடந்துவருகின்றன.
இதற்கிடையில், பல்வேறு விடயங்களுக்கு மத்தியிலும் ஜெனிவா விடயத்தினை கையாண்டு கொண்டிருக்கும் சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் என்று பலதரப்பு சந்திப்புக்களை அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்திப்புக்கள் பற்றி பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அப்பால் இந்த மூன்று சந்திப்புக்களுமே இறுதியில் ஒருபுள்ளியில் சந்திப்பவை தான். அதாவது, இலங்கை மீதான புதிய பிரேரணையை பற்றியது தான் அது.
இம்முறை பிரேரனையை பிரித்தானியா கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ள நிலையில், இம்மறை திரைமறைவிலேயே அதன் செயற்பாடுகள் அமையவுள்ளன. அடுத்து ஐநா நிரந்தரவதிவிட ஒருங்கிணைப்பாளரின் களத் தகவல்கள் முக்கியம் பெறுகின்றன.
இந்தத் தரப்புக்களுடன் ஏனைய இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களின் வகிபாங்களும் பிரித்தானியாவினால் கொண்டுவரப்படும் பிரேரணையில் நிச்சயமாக இருக்கப்போகின்றன.
இலங்கையின் பொறுப்புக்கூறலை மையப்படுத்திய புதிய பிரேரணையை மிக வலுவானதாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கில் உள்ள சில சிவில் அமைப்புக்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களும் பிரயத்தனம் எடுத்துள்ளன.
குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் என்று அனைத்தும் இலங்கையை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான உந்துதலை மனித உரிமைகள் ஆணையளருக்கும் அவரது அலுவலகத்திற்கும் வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளன.
தமிழ்த் தேசிய அணிகளை ஒன்றிணைத்தல்
முதலில் தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஜெனிவா விடயத்திலாவது ஒன்றிணைத்து விட்டாலே ஏனைய பிரச்சினைகளை லாவகமாக தீர்த்துவிடலாம் என்ற மூலோபாயத் திட்டமொன்றும் புலம்பெயர் அமைப்புக்கள், புத்திஜீவிகள் மத்தியில் உள்ளன.
அதன்பிரகாரம், அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் பிரேரணையில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை குறித்துரைத்து இரண்டு வரைவுகளை புலம்பெயர் அமைப்புக்கள் முதலில் சுமந்திரனிடம் கையளித்தன. அதேபோன்று ஏனைய தரப்புக்களிடத்திலும் கையளிப்பதற்கு விளைந்தன.
ஆனால், சுமந்திரன் புலம்பெயர் தரப்புக்களின் முயற்சியை பாராட்டி கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன் தானே பேச்சுக்களை நடத்தி விடயங்களை முன்னெடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.
அதற்காக தன்னிடம் வழங்கிய முன்மொழிவு வரைவில் சிறந்த ஒன்றை தெரிவு செய்து அதன் நகல்களை கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கையளித்தார்.
கஜேந்திரகுமார் தனது கட்சியின் சட்டத்தரணிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடிவிட்டு, சுமந்திரன் கையளித்த வரைவு ‘அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு தடவை கால அவகாசம் வழங்குவதாக இருக்கின்றது’ என்று கூறி நிராகரித்து விட்டார்.
மறுநாளே விக்னேஸ்வரனும், ‘பழைய’ விடயங்களையெல்லாம் சுட்டிக்காட்டி தானும் அந்த வரைவை நிராகரிப்பதாக கூறியதோடு, ராஜபக்ஷ அரசாங்கத்தையும் சுமந்திரன் காப்பற்ற விளைகின்றார் என்ற சாரப்பட கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதனால் கோபமடைந்த சுமந்திரன், விக்னேஸ்வரனின் எழுத்துமூல ஆவணத்திற்கு வாய்மூலமாக பதிலுரைத்தார். அதில் கஜேந்திரகுமாரையும் இணைத்தே சாடினார்.
இதனால் ‘ஜெனிவா விடயத்தில் தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரு அணியில் திரட்டல்’ என்ற முயற்சி முதற்படியிலேயே கானல் நீரானது.
தற்போது சம்பந்தன் தலைமையிலான அணி, கஜேந்திரகுமார் தலைமையிலான அணி, விக்னேஸ்வரன் தலைமையிலான அணி என்பன ஜெனிவாவில் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பாக தனித்தனியாக முன்மொழிவுகளைச் சமர்பிக்கவுள்ளன.
இதனைவிட இந்த மூன்று அணிகளையும் ஆதரிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் அந்த முன்மொழிவுகளை பெற்றுக்கொண்டு பிரசாரம் செய்யப் போகின்றன. இதன்மூலம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மூன்று அணிகள் செயற்படப் போகின்றன. அந்தப் பிளவுபட்ட செயற்பாடுகளே ஜெனிவாவிலும் தொடரப்போகின்றன.
இதனிடையே இலங்கை அரசாங்கம் இம்முறை எந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்ப்பதென்று தற்போதே தீர்மானித்துவிட்டது.
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள சமகாலத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையளாரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டு அதுபற்றிய பரிந்துரைகள் கோரப்பட்டிருக்கின்றன.
சர்வதேச நீதிப் பொறிமுறை
ஜெனிவா என்பது பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச தளத்தில் வைத்திருப்பதற்கும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்குமான ஒரு தளம் மாத்திரமே. ஆகவே இந்தத் தளத்தில் இலங்கையை தொடர்ந்து வைத்திருப்பது முக்கிய விடயம் என பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கு நீதியை, நியாயத்தினை வழங்குவதாக இருந்தால் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயம் நீதித்துறைக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது சிவில் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை.
அதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றுக்கோ இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டுமானால், அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன என்பது முதலாவதாக எழும் கேள்வி.
சரி சாத்தியப்பாடுகள் காணப்பட்டாலும் அந்த கட்டமைப்புக்ளுக்கு கொண்டு செல்வதற்கான பரிந்துரைகளைச் செய்வதற்கு ஆணையாளரிடத்தில் காணப்படும் உரிய சான்றாதாரங்கள் என்ன?
சான்றாதாரங்கள் உள்ளிட்ட இதர விடயங்களில் பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளிடம் எவ்விதமான ஆவணப்படுத்தல்கள், புள்ளிவிபரங்கள்உள்ளிட்டவை காணப்படுகின்றன என்பது இரண்டாவது கேள்வி.
மனித உரிமைகள் பேரவையை முன்னிலைப்படுத்தும் தரப்பினரோ அல்லது அதற்கு வெளியில் நீதிச் செயன்முறையை விரும்பும் தரப்பினரோ ‘செயற்பாட்டு பொறிமுறையை’ பகிரங்கப்படுத்த தயாரில்லை.
அதுமட்டுமன்றி ஜெனிவா விடயமாக இருக்கலாம் அதற்கு அப்பால் செல்லும் நீதிக்கோரிக்கையாக இருக்கலாம், அதனை முன்னெடுப்பதற்கு ஒரு ‘கூட்டுநடவடிக்கையே’ தேவை. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களின் பிரதிநிதிகள், சிவில் மற்றும் புத்திஜீவி அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் ஆகியவற்றின் திரட்சியான கூட்டே அவசியமாகும்.
அதனை ஏற்படுத்தாமல் தனித்தனியாக இயங்க முனைதலானது, இலங்கைத் தீவினைக் கடந்து சர்வதேச தளமொன்றில் நீதிகோரும் தரப்புக்கள் தங்களுக்குள்ளே முட்டி மோதுவதற்கு வழிசமைக்கும்.
தற்போதைய நிலைமைகளின் படி, அடுத்த ஜெனிவா அரங்கானது மூன்று அணிகளாக இருக்கும் அரசியல் தரப்புக்களும், அவைகள் சார் புலம்பெயர் சிவில் அமைப்புக்களும் முட்டி மோதும் களமாகவே இருக்கப்போகின்றது.