File Photo
கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றானது குறைவடைந்து வருவதனால், அந்தப் பிரதேசத்தை நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 994 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கடந்த 12 மணித்தியாலத்தில் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, பொத்துவில், காத்தான்குடி, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இருந்து மொத்தமாக 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2,268 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,763 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதமானது படிப்படியாக அதிகரித்து வருகிறன்ற நிலையில், அக்கரைப்பற்று உப கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதனால் அப் பிரதேசத்தை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் பின்வாங்குவதனால், அப் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 12 பேர் கொரோனா வைத்தியசாலைகளை அணுக முடியாத சூழ்நிலை காரணமாக சுகாதார திணைக்களம் மூலமாக அவர்களை பராமரித்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், திருகோணமலையில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு மவட்ட செயலாளர் பாதுகாப்பு படையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மூதூர் பிரதேசத்தில் தொற்றுக்குள்ளாகியள்ள 6 பேரில் தமது வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார்.