November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலையில் ஒருவாரத்தில் 104 பேருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 668பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 410,48 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 650 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து இன்றைய தினத்தில் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,701 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மேலும் 4 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்வடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு தொற்றாளருடன் தொடர்புகளை பேணியவர்களுக்கான அறிவித்தல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த தொற்றாளருடன் தொடர்பினை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அசிகாரியுடன் தொடர்புகொண்டு பீசீஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த குறித்த நபர் தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குயிருப்பு பிரதேசத்தில் எழுந்தமானமாக நடத்தப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அந்தப் பகுதியில் பலருடன் தொடர்பில் இருந்தவர் என்பதால் அவர் ஊடாக மற்றையவர்களுக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.

யாழில் இன்று ஒருவருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடயில் 393 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் சங்கானை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் ஒரு வாரத்தில் 104 பேருக்கு தொற்று

டிசம்பர் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் 58 பேருக்கும், மூதூரில் 28 பேருக்கும், கிண்ணியாவில் 9 பேருக்கும், தம்பலகாமத்தில் 5 பேருக்கும், சேருவலயில் 3 பேருக்கும் மற்றும் கோமரங்கடவெலவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.