கொழும்பு துறைமுகத்தை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திப் பணிகளுக்காக இந்தியாவின் ‘அதானி குழு’ நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த துறைமுகமானது இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தேசிய சொத்துக்களை முழுமையாக விற்பனை செய்யும் நோக்கம் எமது அரசாங்கத்திற்கு இல்லை என்பதை பலரும் மனதில் கொள்ள வேண்டும். நாட்டுக்கான முதலீடுகளை பெற்றுக் கொள்வதும் தேசிய சொத்துக்களை சிறந்த முறையில் பாதுகாப்பதுமே எமது நோக்கம்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை கருத்தில் கொண்டே நாம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.
கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு இரகசியமான முறையில் வழங்கியதைப் போன்று இந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.