கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சிலவற்றை அதிலிருந்து விடுவிப்பதற்கும், மற்றைய பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்திருக்கவும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் மருதானை, டேம் வீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த மற்றும் ஹுனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயூரா பிளேஸ், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன குடியிருப்பு, பொரளை பொலிஸ் பிரிவில் ஹல்காவத்த மற்றும் காளிப்பிள்ளை தோட்டம் ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
ஆனபோதும் மோதரை, கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும், பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பேர்ஹசன் வீதியின் வலதுபக்கம், வெள்ளவத்தை நசீர்வத்த ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.
அத்துடன் கொழும்பில் நாளை காலை 5 மணி முதல் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மற்றைய மாவட்டங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களும் மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.