November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி

Photo: Facebook/ National Film Corporation

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையிஉள்ள திரையரங்குகளை திறப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அனுமதியளித்துள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள திரையரங்குகள் முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால் கலைஞர்களுக்கும் மற்றும் திரைப்படத் துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் சமீபத்தில் பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதற்கமைய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

திரையரங்குகளை திறக்கும்போது குறித்த திரையரங்குகள் உரிய முறையில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகைத்தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட்-19 சவாலுக்கு மத்தியில் கலைஞர்களையும், திரைப்படத் துறையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் பல கலைஞர்கள் பிரதமரின் இத்தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.