November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் ஆன்மீக தரப்பினருடன் கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரையும் ஒன்றுபடுமாறு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களையும்  ஆன்மீகத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கமைவாக, நேற்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை அவரது இலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளையும் சிவகுரு ஆதீனத்தில் சந்தித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரையும் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களது தரப்பில் அருட்பணி ஜெபரணட்னம் அவர்களையும், நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் தலைவருமான அருட்பணி மங்களராஜா, அருட்பணி  இ.ம.வி.ரவிச்சந்திரன் ஆகியோரையும் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, யாழ். நாகவிகாரை பீடாதிபதி விமல தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு கோரி நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒன்றிணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு பரிபூரண ஆதரவை தருவதாக கூறியிருந்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஏனைய தரப்புகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.