திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 24 வன்முறைக் கும்பல்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக பொலிஸாரினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் செயற்பாட்டில் இருந்த 36 வன்முறைக் கும்பல்களில் சிலவற்றின் செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளதாகவும், தற்போது அவற்றில் 24 கும்பல்களே தீவிரமாக செயற்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தவகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக் கும்பல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீதியில் பயணிப்போரின் தங்க சங்கிலிகளை பறித்துச் செல்லல் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் என்பன அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் இவ்வாறாக தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்ட நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் பெண்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவதால், பெண்கள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.