இலங்கையில் ‘சேனா’ படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .
அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு நேற்று சென்றிருந்த ஜனாதிபதி, அங்கு விவசாய நிலங்களை பார்வையிட்டார்.
அதன்போது, ‘சேனா’ படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் ஊடாக ஆராய்ந்து நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் ஜனாதிபதி விவசாயிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதியை பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.