இலங்கையின் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தக் கூடாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, மாகாண சபைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அந்தப் பணிகள் முடிவடையும் வரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை ஒத்தி வைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என்று அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
2021 ஏப்ரல் மாதத்திற்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வரும் நிலையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் யோசனையொன்றை முன்வைத்ததுடன், அந்த யோசனை தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி கலந்துரையாடுவதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.