File photo
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 20,000 கிலோ மஞ்சள் மூடைகள், அம்பாந்தோட்டை ஹுங்கம – கலமெட்டிய மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மஞ்சள் கடத்தல் தொடர்பாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த துறைமுகப்பகுதியில் மீன்பிடி படகொன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த படகில் இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மஞ்சள் மூடைகளை ஏற்றிச் செல்வதற்காக மீன்பிடித் துறைமுகப் பகுதிக்கு வந்திருந்த லொறியொன்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்துடன் மேலும் சிலர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையால் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் பலவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களில் மஞ்சளும் உள்ளடங்குகின்றது.
இதனால் இலங்கையில் மஞ்சளுக்கான கிராக்கி அதிகரித்துள்ளதுடன், கிலோவொன்று 3500 ரூபாவுக்கு அதிக விலையிலேயே சந்தைகளில் விற்பனையாகின்றன.
இந்த நிலைமையிலேயே இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக மஞ்சளை கடத்தும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.