யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது.
சர்வதேச விமான நிலையத்திற்கான தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பெரிய ரக விமானங்களை தரையிறக்குவதற்காக குறித்த விமான நிலையத்தின் தற்போதுள்ள ஒடுபாதையானது மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டளவில், குறித்த விமான நிலையத்துக்கான சர்வதேச தர ஒப்புதல்களை பெற முடியும் என்பதுடன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களின் தரத்தில் யாழ்ப்பாண விமான நிலையமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் வட மாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சுரேன் ராகவன் கூறுகையில், இந்த அபிவிருத்தியானது சிறந்ததொரு திட்டமாகும். இதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் சமூகங்களுக்கிடையே இணக்கமான சமூக கட்டமைப்பை உருவாக்கவும் முடியும்.
மேலும், வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடிவதுடன், வடக்கு மாகாணத்திற்கு அன்னிய செலாவணி மூலமான அதிக முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என அவர் தெரிவித்தார்.