பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றானது இலங்கையிலும் மிக அதிகளவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர் வைத்தியர் ஹரித அளுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை 60 வீதமானோர் இந்த புதிய வகை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர, ஆசிய நாடுகளிலும் தற்போது இந்த புதிய வைரஸ் தொற்று பரவியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் சிங்கப்பூரிலும் புதிதாக வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள இலங்கை தொற்று நோயியல் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, இந்த வைரஸ் தொடர்பில் தாம் தொடர்ந்தும் அவதானத்துடனேயே இருப்பதாகவும், இது தொடர்பான பரிசோதனைகளை நடத்த தேவையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.