இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 40,373 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 712 பேர் இன்றைய தினத்தில் பூரண குணமடைந்து சென்றுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கைக 32,051 ஆக அதிகாரித்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
ஒருவர் மரணம்
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
மருதனார்மடம் கொத்தணியில் 4 பேருக்கு தொற்று
யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய நான்கு பேரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்படி மருதனார்மடம் கோரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்
கொழும்பு நகர பிரதேசத்திற்குள் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை காணக் கூடியதாக உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அங்கு கடந்த வாரங்களாக தனிமைப்படுத்தல் கடுமையாக பின்பற்றப்படுவதாலேயே அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரங்களில் நாளாந்தம் 300 முதல் 350 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 90 -110 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.