Photo: Facebook/ Dayasiri Jayasekara
உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு விசேட வரியை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதனை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி இந்த விசேட வரி விதிப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் புதிய வகை ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.