இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென்று முஸ்லிம்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கை நியாயமானதே எனவும், இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசாங்கம் கொடூரமான கரங்களை நீட்டி வருகின்றது. அதேபோன்று எமது நிலங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என்று கூறியுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இந்த விடயங்களை தோற்கடிக்க தமக்குள் ஒற்றுமை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த நாட்டை பொறுத்த வரையில் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் அரசாங்கம் கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்களில் சமய வேறுபாடுகளின்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போதே இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.