January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுனாமி பேரழிவின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

2004 ஆம் ஆண்டில் இலங்கையில் பேரழிவுகளை ஏற்படுத்திய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் 16  ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று நாட்டின் பல இடங்களிலும் நடத்தப்பட்டன.

நாடளாவிய ரீதியில் இடர் முகாமைத்துவ நிலையங்கள் மற்றும் பிரதேச செயலங்கள், பொதுஇடங்கள் ஆகிய இடங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யாழில் தீபச்சுடர்கள் ஏற்றி அனுஷ்டிப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்தநிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான அங்கஜன் ராமநாதன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரீ.எ.சூரியராஜா, மதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கிண்ணியாவில் சுனாமி நினைவு தின நிகழ்வு

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்தினால் சுனாமி நினைவு தின நிகழ்வு, கிண்ணியா கடற்கரை சிறுவர் பூங்கா சுனாமி நினைவு தூபிக்கு முன்னால் நடத்தப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிண்ணியா பிரதேசத்தில் உயிரிழந்தவர்களுக்காக கிண்ணியாவில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுப் பேருரைகளும், தூஆப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.

அம்பாறை நினைவேந்தல் நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீனவர் சங்கத்தினர் ஆலய தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனையிலும் உயிரிழந்தவர்களின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.

இதற்கமைய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை, இணைந்து ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் தமாம் ,விஷேட துஆ பிராத்தனை கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மலையகத்தில்  அஞ்சலி

மலையகத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் அட்டன் – டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியாவில் பிரார்த்தனை நிகழ்வு

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் நினைவேந்தல்

மன்னாரிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டன.

மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை குறித்த நினைவுதின நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 9.25 முதல் 9.25 வரையான நேர பகுதியில்  தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.