November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்

file photo: Facebook/ Bandaranaike International Airport

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்றுக்கான காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பயணிகள் தங்குவதற்கான ஹோட்டல்களைப் பதிவு செய்யும்போது அல்லது விமான பயணச் சீட்டினை கொள்வனவு செய்யும்போது காப்புறுதியினைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், விமான நிலையங்களுக்கு வருகை தருவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூடங்களில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து இரு வாரகால பகுதிக்குள் 3 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் அனைத்தும் ஒரே மருத்துவ ஆய்வுகூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதியளிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் இரு வாரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுதந்திரமாக வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் வாரத்தில் ஹோட்டலில் இருந்து வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.