July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரேனா தொற்றுக்கு உள்ளான 551 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,782 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 771 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,339 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த பண்டிகை காலத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மருதனார்மடம் கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 105 ஆக உயர்வு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மருதனார்மட கொரோனா கொத்தனியின் ஊடகா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 105 ஆதிகரித்துள்ளது.

வவுனியாவில் ஒருவருக்கு தொற்று

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த இருதினங்களுக்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் வேறு நோயொன்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்த வைத்தியசாலையின் விடுதியில் இருந்த ஏனைய நோயாளர்கள் மற்றும் ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

கொரோனா மருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கொரோனாவுக்கு எதிராக கேகாலையை சேர்ந்த உள்ளூர் மருத்துவர் தம்மிக்க பண்டார என்பரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் இன்று அவரின் வீட்டுக்கு அருகில் கூடியுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணி முதல் அவரின் வீட்டுக்கு அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருத்துவரால் தயாரிக்கப்பட்டுள்ள திரவ மருந்து இலவசமாக விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்தே மக்கள் அந்தப் பகுதியில் கூடியுள்ளனர்.

ஆனபோதும் அங்கு அந்த மருந்து விநியோகிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் கூடியிருந்தவர்களை திருப்பியனுப்பியுள்ளனர்.