January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ : வலி. மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்குள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சகோதர சிங்கள மக்களும் முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தை மனிதநேய ரீதியில் அணுகி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் 34 ஆவது கூட்டம் இன்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உறுப்பினர் ந.பொன்ராசா விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். அது சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இலங்கையின் பல்வேறு இடங்களிலும் கைது செய்யப்பட்ட 78 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகசீன் சிறைச்சாலை உட்பட மேலும் சில சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயைக் கருத்திக்கொண்டு 8000 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை அரசு ஆரம்பித்திருந்தது. இதுவரை 7400 வரையான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகின்ற போதும் இதற்குள் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளடக்கப்படவில்லை என்று பிரேரணை ஊடாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த சந்தர்ப்பத்திலாயினும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதாக பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரும் ஆபத்திற்குள் சிக்கியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்குமாறு இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களிடம் நாம் பகிரங்க கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதனை இன்றைய தினமே உரிய தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.