இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிக்கும் நடைமுறைக்கு எதிராக நாட்டில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் இன்று கபன்சீலை போராட்டங்களை நடத்தினர்.
பள்ளிவாசல்களில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் தமது பிரதேசங்களில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கல்முனை பிரதான வீதியில் ஆர்ப்பட்டமொன்று நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ் அப்துல் ரஸாக்கின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட நடைபெற்றது.
சுகாதார ஒழுங்குவிதிகளை பேணியே இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கைகளில் கபன்சீலை துணிகளை கட்டியிருந்ததுடன், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டுமென்ற வாசகங்களை எழுதிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தப்போராட்டம் மௌலவி ஏ.எச்.எச்.எம் நௌபரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் உட்பட பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, புத்தளம் பாலாவி நகரிலும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் புத்தளம் பாலாவி-கல்பிட்டி பிரதான வீதியிலுள்ள அன்னமாள் சிலைக் கோபுரத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதலில் கபன் சீலையை கட்டிய பின்னர் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.