
File Photo
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக இலங்கை கூடுதல் அவதானத்துடனேயே இருக்கின்றது என்று தொற்று நோயியல் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் அதிக வீரியம் கொண்ட இரண்டு புதிய வகை வைரஸ்கள் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் நபருக்கு நபர் பரவும் வேகம் அதிகமென ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.
குறித்த புதிய வகை வைரஸ் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக கருதப்பட்டாலும், உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரமானது என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு தொடர்ந்தும் அவதானத்துடனேயே இருப்பதாகவும், நாட்டிற்குள் புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கும் தாம் தயார்நிலையில் உள்ளதாகவும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.