எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம்’ எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ‘ஃப்ளுகோஷைலின்’ ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்கவும், நிறுத்தவும் நடவடிக்கையெடுத்து நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்ய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.